மனித உரிமைகள், ஜனநாயகம், தனியுரிமை : வெடிக்கும் சீன-அமெரிக்க கலாச்சார மோதல்!
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிலிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் ஆகியோர் சீனாவின் உயர்மட்ட டிப்ளமாட்களான யாங் ஜெயிச்சி மற்றும் வாங் யி ஆகியோருடன் அமெரிக்க மாகாணமான அலாஸ்காவில் சந்தித்தனர்.
அங்கு ஏற்பட்ட சூடான, கடுமையான விவாதங்கள் தலைப்பு செய்திகளில் அடிபட்டது. சீனா, அமெரிக்காவை கடுமையாக தாக்கி இந்த மாநாட்டை தன் நன்மைக்காக பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவிற்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிப் பேச தார்மீக உரிமைகள் இல்லை என குறிவைத்தது சீனா.
சீன ராசிப்படி 2021 ஆம் ஆண்டு 'எருது ஆண்டு'. இது கடின உழைப்பு மற்றும் நேர்மையின் மூலம் திறனையும் செழிப்பையும் குறிக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த வேளையில் கட்சியின் வரலாற்றைப் பற்றி மக்களை 'கல்வி கற்க வைக்க' வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது.
இந்த முயற்சியின் கீழ் மாணவர்கள் 'புரட்சி' நடந்த இடங்களுக்கு சென்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'போராட்டங்களைப்' பற்றி அறிந்து அதை பாராட்ட வேண்டும் என CCP நினைக்கிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் சாதாரண குடிமக்கள் சீனாவின் நிர்வாக முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அவர் இது குறித்து கூறுகையில், "மேலைநாடுகளில் மதிப்புகளையும் அரசியல் அமைப்புகளையும் ஏற்றுக் கொள்வது மட்டுமே சீர்திருத்தம் அல்ல. நம்முடைய பாணி சீர்திருத்தம் சீனாவில் மதிப்புகளைக் கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே அலாஸ்காவில் நடந்த மாநாட்டில் வாங் யி, 'சீனாவின் பாணி ஜனநாயகம்' என்று ஒன்றை முன்வைத்தார். இப்படி சீனா அகம்பாவத்துடன் பேசுவதற்கு , அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிளவே காரணம் என்று கூறலாம். இந்த வருட ஆரம்பத்தில் கேப்பிட்டலில் நடந்த கலவரம் குறித்து பேசிய சீன மத்திய அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணையத்தின் தலைவர் சென் இக்ஸின், சீனாவின் உயர்வுக்கு சீனாவின் அரசாங்க அமைப்பு தான் காரணம் என்றும் மேலைநாடுகளின் வீழ்ச்சி அவர்களுடைய அரசியலமைப்பின் விளைவாகும் என்று கூறினார்.