கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளி, ஜோ பைடனின் இந்திய தொடர்பு பற்றி தெரியுமா?

கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளி, ஜோ பைடனின் இந்திய தொடர்பு பற்றி தெரியுமா?

Update: 2020-11-09 17:41 GMT

அமெரிக்க தேர்தலில் நீடித்த குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பைடனும் கமலா ஹாரிசும் முறையே அதிபராகவும் துணை அதிபராகவும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய பூர்வீகம் பற்றியும் தனது தாத்தாவுடன் சென்னை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டதைப் பற்றியும் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசி இந்தியர்களிடையே ஓட்டு சேகரித்தது நினைவு கூரத்தக்கது. அதிபர் ஜோ பிடனுக்கும் கூட இப்படி ஒரு பின்னணி இருக்கக் கூடும் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக தனக்கு இந்தியாவுடன் இருக்கும் தொடர்பு பற்றி குறிப்பிட்ட ஜோ பைடன் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நான்கு தலைமுறைக்கு முன் ஜார்ஜ் பைடன் என்ற தனது முன்னோர் ஒருவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல் ஒன்றில் கேப்டனாக பணிபுரிந்த போது இந்தியா வந்து இந்தியப் பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே வசித்த நிகழ்வு பற்றி குறிப்பிட்டார்.
 

இந்தியாவில் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் ஒருவர் இருந்ததற்கான எந்த ஆவணமும் இல்லை என்றாலும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களில் பைடன் என்ற பெயரில் இருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சகோதரர்கள். அவர்கள் இருவருமே லண்டன் மற்றும் இந்தியா இடையிலான கப்பல்களில் சாதாரண பணியாளர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதில் வில்லியம் ஹென்றி பைடன் என்ற சகோதரர் மிடாஸ் என்ற கப்பலில் தனது தொழில் வாழ்க்கையைத் துவக்கினார். 1843ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று பக்கவாதத்தால் தனது 51வது வயதில் அப்போது ரங்கூன் என்று அறியப்பட்ட பகுதியில் உயிரிழந்தார். அதற்கு முன் அன்னா ராபர்ட்சன், கங்கா மற்றும் தாலியா உள்ளிட்ட கப்பல்களுக்கு கேப்டனாக பணியாற்றி இருக்கிறார்.

இவை ஆசிய கடல்பகுதிகளில் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபட்ட சிறிய அளவிலான கப்பல்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இவரது மூத்த சகோதரர் கிறிஸ்டோபர் பைடன் அந்தக் கால மதராசில் பலரும் அறிந்த நபராக இருந்திருக்கிறார்.

பெரிய பெரிய கப்பல்களை கேப்டனாக நிர்வகித்த கிறிஸ்டோபர் 1830ஆம் ஆண்டு பிரின்சஸ் சார்லட் என் கப்பலின் கேப்டனாக தனது கடல் வாழ்க்கையை முடித்துக் கொண்டு லண்டன் அருகே பிளாக்ஹீத் என்ற பகுதியில் தங்கி தான் வெகு காலமாக எழுதி வந்த புத்தகத்தை எழுதி முடிக்க முன்னிட்டார். ஹேரியட் ஃப்ரீத் என்ற பெண்ணை மணம் முடித்த பைடனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகன் என இரு குழந்தைகள் இருந்ததாக தெரிகிறது.

41 வயது என்பது ஓய்வுபெறும் வயது அல்ல என்று அவருக்கு தோன்றியது தான் என்னவென்று தெரியவில்லை. விக்டோரியா என்ற பெயரில் புதிதாக ஒரு கப்பலை வாங்கி கொழும்பு பாம்பே இடையில் அதை செலுத்தியுள்ளார். அந்தக் கப்பலில் தனது இரண்டாவது பயணத்தின் போது சாகோஸ் ஆர்சிபலகோ தீவையும் கண்டுபிடித்துள்ளார்.

எனினும் கப்பல் தொழிலில் நஷ்டம் அடைந்த காரணத்தால் என்ன என்று தெரியவில்லை, 1839ஆம் ஆண்டு மனைவி மற்றும் மகளுடன் மதராஸில் கடல் போக்குவரத்து துறையில் சரக்கு கிடங்கில் பணியாற்ற இந்தியா வந்து விட்டார். இந்த பயணத்தின் போது அவரது மகள் இறந்து விட்டதாக தெரிகிறது.

 அதன் பின்னர் 19 வருடங்கள் மதுரையில் வசித்த பைடன் தனக்கென்று ஒரு நல்ல பெயரில் உருவாக்கிக் கொண்டார். கடல் போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க கடற்கரை ஓரத்தில் விளக்குகளை அமைப்பது இந்தியர்கள் உட்பட கப்பலில் பணியாற்றிய இறந்தவர்களின் விதவை மனைவிகளுக்கும் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவி செய்வது உள்ளிட்ட சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

கிறிஸ்டோபர் பைடன் 1858ஆம் ஆண்டு மதராசிலேயே உயிரிழந்துள்ளார். இங்கிருக்கும் கல்லறையில் அவரது நினைவுச் சின்னமும் இருக்கிறது. இவரது வாழ்க்கை பற்றி கிடைத்திருக்கும் தகவல்களில் இந்தியப் பெண்ணை மணந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்ற போதிலும் ஜோ பைடனுக்கு இந்தியாவில் வசித்த முன்னோர் ஒருவர் இருந்திருந்தால் அவர் இந்த கிறிஸ்டோபர் பைடனாதான் இருக்கக் கூடும்.

Similar News