43 வயதில் முதன் முறையாக சொந்த மாவட்டமான திருவாரூரை சுற்றி பார்த்த உதயநிதி - ஊர்பாசமா? ஓட்டு தேவையா?

43 வயதில் முதன் முறையாக சொந்த மாவட்டமான திருவாரூரை சுற்றி பார்த்த உதயநிதி - ஊர்பாசமா? ஓட்டு தேவையா?

Update: 2020-11-30 18:32 GMT

திருவாரூர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி'க்கு மிகவும் பிடித்த ஊர். காரணம் கருணாநிதி'யின் அரசியல் செயல்பாடுகளை முதலில் இங்குதான் மாணவர் பருவத்தில் துவங்கினார். கருணாநிதி'யின் பிறந்த ஊரான திருக்குவளையும் திருவாரூரில் இருந்து மிக அருகாமையில் உள்ள கிராமம் தான்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருவாரூரை மாவட்ட தலைநகராக அறிவித்து அதன் கீழ் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை என 7 தாலுக்கா'க்களை உள்ளடக்கி தனி மாவட்டமாக கருணாநிதி அறிவித்தார். திருவாரூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தான் தமிழ்நாட்டின் முன்மாதிரி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

கருணாநிதி'யின் கடைசி கால தேர்தலில் திருவாரூர் எம்.எல்.ஏ'வாக இருந்துதான் இறந்தார். கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் முத்துவேலரின் நினைவிடம் கூட திருவாரூரி்ல் உள்ள காட்டூரில்தான் உள்ளது. கருணாநிதி'யின் மகள் செல்வி கூட இன்றும் இங்குதான் வசிக்கிறார். 

இப்படி கருணாநிதியின் பிரியமான திருவாரூர் மாவட்டத்திற்கு தன் வாழ்நாளில் முதன்முறையாக தி.மு.க'வின் தற்போதைய பட்டத்து இளவரசரும் கருணாநிதியின் பேரனுமாகிய உதயநிதி  சுற்றிபார்க்க வந்துள்ளார் தனது 43'வது வயதில்.

தாத்தா'வின் பூர்வீக கிராமம் மற்றும் அதன் சுற்றுபுறங்களை பேரன்  பார்ப்பதில் ஆச்சர்யம் இல்லைதான். ஆனால் 43 வயது வரை ஏதோ அயல்நாட்டில் வசித்தது போலவும், தமிழ்நாட்டின் பக்கமே வராதது போலவும், திருவாரூர் மாவட்டம் ஏதோ தனிநாடு போலவும் இங்கு வர தனி ஆவணங்கள் தேவை என்ற நிலை உள்ளது போலவும் தனது 43 வயது வரை இந்தப்பக்கம் தலை வைத்து கூட படுக்காத உதயநிதிக்கு இப்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் என்ன வேலை? 

இவ்வளவு ஏன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தின் சரிபாதி இடங்களை "கஜா" எனும் புயல் புரட்டி போட்டது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், கோட்டூர், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் புயல் கோரதாண்டவம் ஆடி சர்வநாசம் செய்துவிட்டு போனது. மேற்கண்ட பல பகுதிகளில் மின்சாரம் வருவதற்கு 25 நாட்கள் கூட ஆயிற்று.

அந்த சமயத்தில் கூட இந்த சினிமா கதாநாயகன் உதயநிதி திருவாரூர் மாவட்டத்தை எட்டி கூட பார்க்கவில்லை. இங்கு பசியால் அழுத குழந்தைகள், பசியால் துடித்த பெரியவர்களுக்கு பால், பிரட் பாக்கெட் கூட வழங்க வரவில்லை இந்த பட்டத்து இளவரசர். இப்பொழுது ஏன் இந்த கரிசனம் கதாநாயகரே திருவாரூர் மாவட்டத்தின் மீது?

உங்கள் குலதெய்வம் அங்காளம்மன் கோவிலாகட்டும், உலகப்புகழ் திருவாரூர் தேரோட்டமாகட்டும் இதுவரை நீங்கள் எட்டி பார்த்ததுண்டா? இப்படி ஆலய விழாக்கள் முதல் இயற்கை சீற்றங்கள் வரை ஒரு நிகழ்விற்கும் திருவாரூரை கண்டுகொள்ளாத நீங்கள் இப்பொழுது இங்கே 4 நாட்களாக வயல் வரப்புகளிலும், டீ கடைகளிலும், உடன்பிறப்புகளின் வீடுகளிலும் படுத்து புரள்கிறீர்களே ஏன் ஐயா?

எல்லாம் வாக்கு அரசியல், உங்களுக்கு தேவை வாக்கு அதானே? உங்கள் தாத்தா இறந்த வெற்றிடத்தை உங்கள் தகப்பன் நிரப்பிவிட்டார் என நிரூபிக்க தேவை இந்த திருவாரூர் மாவட்ட மக்களின் வாக்கு அதற்குதானே உங்களின் இந்த திருவாரூர் மாவட்ட திடீர் பாசம்?? 

ஏன் இப்பொழுது கூட நீங்கள் திருவாரூரை காணொளி காட்சி வாயிலாகவே பார்க்கலாமே ஏன் இந்த விஜயம்? திருவாரூர் மக்கள் உங்களின் குடும்ப பதவி பசிக்கு உணவிட வேண்டுமா இளஞ்சூரியனே?

மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுள்ளார்கள். உங்கள் தாத்தா அரியணை ஏற இங்குள்ள ஆரூர் தியாகராஜரும், இங்கு வாழும் மக்களுமே காரணம் அதை உங்கள் தாத்தா கருணாநிதி நன்கு உணர்ந்தவர் உங்களுக்கு புரிய காலம் ஆகலாம்.

Similar News