இந்த தலத்தில் ஒரு நாள் தங்கி வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிட்டும்

Update: 2022-09-27 00:45 GMT

சிவபெருமானின் ஐந்து பஞ்சாரம ஷேத்திரங்களுள் ஒன்று ஷீரராமம். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமான இது ஆந்திர மாநிலம் பாலகொல்லு எனும் இடத்தில் அமைந்துள்ளது. அதாவது கோதாவரி நதிக்கரைக்கு மேற்கில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவரை ஷீரராம லிங்கேஸ்வர சுவாமி என்ற திருப்பெயரில் அழைப்பர். காரணம் இந்த லிங்கத்தை நிர்மாணித்து வழிபட்டவர் ஶ்ரீராம பிரான் என்பது வரலாறு. மேலும் இங்கிருக்கும் அம்பாளுக்கு மாணிக்காம்பாள் என்பது திருப்பெயராகும்.

தேவியின் 33 சக்தி பீடங்களுள் மிக முக்கியமான சக்தி பீடமாக இக்கோவில் கருதப்படுகிறது. மேலும் இந்த சக்தி பீடத்தை மாணிக்க சக்தி பீடம் என்று அழைப்பார்கள். ஆந்திராவில் இருக்ககூடிய கோவில் கோபுரங்களிலேயே இந்த கோவில் கோபுரம் மிக உயரமானது என கருதப்படுகிறது. கிட்டத்தட்ட பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என கருதப்படுகிறது. அதனால் இந்த கோவிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளால் ஒன்றாக வைத்து பாதுகாக்கப்படுகிறது.

இங்கு இருக்கும் சிவலிங்கம் பால் போன்ற வெண்மையான நிறத்தில் இருப்பது தனிச்சிறப்பு. காசி விஸ்வேஸ்வரா, பார்வதி தேவி, லட்சுமி தேவி, நாகரேஸ்வர லிங்கம், துண்டி விக்னேஸ்வரா, வீர பத்ரா என இன்னும் பல தெய்வங்களுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், தாரகாசுரனை குமாரசுவாமி வதம் செய்த போது அரக்கனின் தொண்டையில் இருந்த ஐந்து லிங்கங்கள் உடைந்து ஐந்து இடங்களில் விழுந்தது. அப்படி விழுந்த லிங்க ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. மற்ற நான்கு இடங்கள் யாதெனில், பீமாவரத்தில் இருக்கும் சோமராம, திராக்ஷராமத்தில் இருக்கும் திராக்ஷராமம். சாம்லகோட்டையிலிருக்கும் குமர ராமம், அமராவதியில் இருக்கும் அமரராமம் ஆகும்.

அதுமட்டுமின்றி இந்த லிங்கம் திரேதாயுகத்தில் ஶ்ரீராம பிரானால் வழிபடப்பட்டது. அதனால் தான் இந்த மூலவருக்கு ராமலிங்கேஸ்வரர் என்று பெயர். மேலும் இந்த கோவிலில் ஒரு நாள் தங்கி வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. இங்கு ஒரு நாள் தங்கி வழிபட்டால் காசி விஸ்வநாதரை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். முக்தியை வழங்கும் பெருமானாக இருப்பதால், சிவராத்திரி விழா அன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே கூடுவது வழக்கம். .

Tags:    

Similar News