பெருமாளின் பாத தரிசனத்தை ஜன்னல் வழியே காண வேண்டும்.ஆச்சர்ய நவதிருப்பதி

திருப்புளியங்குடி பூமிபாலகர் பெருமாள் கோவில்

Update: 2022-02-10 01:40 GMT

விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட தலங்களில் 9 திருத்தலங்கள் நவதிருப்பதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் திருபுளியங்குடி பெருமாள் கோவில். தமிழகத்தின் தாமிரபரணி நதிக்கரையில் தூத்துகுடியில் அமைந்துள்ளது இந்த கோவில். திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் இக்கோவிலை காணலாம். இங்கிருக்கும் பெருமாள் பூமிபாலகர் என்றும் இலட்சுமி தேவியார் புளியங்குடி வள்ளி என்றும் அழைக்கப்படுகிறார். திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ அமைந்திருக்கும் இக்கோவிலானது திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெற்று ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களுள் ஒன்றாகும்.

அதுமட்டுமின்றி விஷ்ணு பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இதுவும் ஒன்று இங்கிருக்கும் பெருமாளை வைகுண்டநாதர் என்றும் இலட்சுமி தேவியை வைகுண்டவள்ளி என்றும் அழைப்பது வழக்கம். மார்கழியில் வருகிற வைகுண்டா ஏகாதசியும், நம்மாழ்வார் பிறந்த தினத்தில் நவதிருப்பதியையும் ஒருங்கிணைத்து நிகழும் கருடசேவையும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் தலவரலாறு யாதெனில், பூமியை சுற்றி வந்த விஷ்ணு பெருமாள் ஓய்வுக்கு நின்ற இடம் இது. அப்போது பூமாதேவியை அவர் சந்திக்கவில்லை. இந்த நிகழ்வு கொடுத்த ஏமாற்றத்திலும், விஷ்ணுவின் துணையான ஶ்ரீதேவிக்கு கிடைத்த வாழ்வு தனக்கில்லை எனும் வருத்தத்திலும் பூமாதேவி தன் இயக்கத்தை நிறுத்த உலக உயிர்கள் இன்னலுக்கு ஆளாயின. இதனை தீர்க்குமாறு தேவாதி தேவர்களும் விஷ்ணுவை வேண்ட ஶ்ரீதேவியுடன் பூலோகம் சென்று பூமாதேவியை சந்தித்தார் விஷ்ணு. பின் அவரை சாந்தமாக்கி பூதேவி ஶ்ரீதேவியுடன் இணைந்து அருள் தந்தார். பூமையை இன்னலில் இருந்து காத்ததாலே அவர் பூமிபாலகர் என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

நவதிருப்பதி என்படு நவ கிரகங்களுடன் தொடர்புடைய அம்சமாகும். நவதிருப்பதியென வகுக்கப்பட்டுள்ள கோவில்களில் இருக்கும் பெருமாளே குறிப்பிட்ட நவகிரகமாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் புளியங்குடி பூமிபாலக பெருமாள் புதனுக்குரிய கிரகமாகும். எனவே ஜோதிடத்தில் புதன் சார்ந்த இடையூறு இருப்பின் இத்தலம் வந்து இறைவனை வணங்க சகல விதமான பிரச்சனையும் தீரும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாக பெருமாளின் நாபியிலிருந்து எழும் தாமரை கொடி சுவற்றில் உள்ள பிரம்ம தேவரின் தாமரையோடு இணைகிறது. இந்த கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. பெருமாளின் பாதத்தை தரிசிக்க வேண்டுமெனில் வெளிப்புற பிரகாரத்தின் சாளரம் வழியே தரிசிக்க வேண்டும்.

Tags:    

Similar News