விநாயகருக்கு போடும் தோப்புகரணத்தை, சூப்பர் பிரெயின் யோகா என்பது சரியா?

Update: 2023-01-30 12:30 GMT

குறும்பு குழந்தைகளை கண்டிக்க இன்று பெற்றோர்கள் பல வழிகளை கையாள்கிறார்கள். ஆனால் நம் ஆதிகாலத்திலிருந்து இருந்து வரும் ஆரோக்கியமான தண்டனை என்றால் அது தோப்புக்கரணம் தான். இந்த தோப்புக்கரணம் என்பது வெறும் உடல் சார்ந்த ஒரு பயிற்சியாக மட்டுமின்றி ஆன்மீக ரீதியிலும் முக்கியத்துவம் நிறைந்ததாக இருக்கிறது.

விநாயக பெருமானை வழிபடும் முறைகளில் தலையில் குட்டி தோப்புக்கரணம் இடுவதும் ஒன்றாகும். இப்படியொரு வழிபாட்டு முறை ஏன் வந்தது என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. ஒரு முறை கஜமுகாசுரன் என்ற அரக்கன் தன் தவவலிமையால் ஏராளமான வரங்களை சிவபெருமானிடம் பெற்றிருந்தான். அவன் தேவர்களை மிகவும் கொடுமையாக வதைத்து வந்தான். குறிப்பாக அனைவரையும் பல ஆயிரம் முறை தோப்புக்கரணம் போட சொல்லுவானாம். இதனால் சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டிய போது. அந்த அரக்கனை அழிக்க சிவபெருமான் விநயாகரை அணுப்பினார். அந்த அரக்கன் விநாயகரையே தோப்புக்கரணம் போட சொன்னானாம். எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் இல்லை என்று வரம் வாங்கியிருந்த அரக்கனை, தன் கொம்பினை ஒடித்து வீசி அழித்தார் கொன்றார் விநாயகர். தன் தவறுக்கு வருந்தி அவனே விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டான் என்பது ஐதீகம். அதன் பொருட்டே இன்றும் நாம் விநாயகரை வழிபடுகையில் தோப்புக்கரணம் இடுகிறோம்.

மற்றொரு கதை உணர்த்தும் செய்தி யாதெனில் ஒருமுறை அகத்தியர் தன் கமண்டலத்தில் வைத்திருந்த நீரை காகம் ஒன்று தட்டி விட்டது. அந்த நீர் பெருகி விரிந்து ஆறாக ஓடியது அதனாலேயே அதற்கு காவிரி நதி என்று பெயர் வந்தது என்பது நம்பிக்கை. தன் கமண்டலத்தை தட்டியது யார் என்பதை காண அகத்தியர் முற்பட்ட போது அங்கே காகம் இல்லை. ஒரு சிறுவன் தான் இருந்தான். அவன் தலையிலே குட்ட அகத்தியர் முனைந்த போது அவர் விநயாக பெருமான் என்பதை அறிந்து ஓங்கிய கையை தன் தலையில் குட்டி கொண்டார். எனவே தான் விநாயகரை வழிபடுகையில் தலையில் குட்டி தோப்புக்கரணம் இட்டு வழிபடுகிறோம் என்பது தொன் நம்பிக்கை.

இன்று இந்த தோப்புக்கரணத்தை சூப்பர் யோகா என்ற பெயரில் வெளிநாட்டவர் பயன்படுத்துவதை நாம் காண முடியும். தோப்புக்கரணம் என்பது ஒருவரின் மூளை செயல்பாட்டினை தூண்டி, நியாபசக்தியை அதிகப்படுத்தும் திறன் கொண்டது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே நம் முன்னோர்கள் இப்படியொரு பயிற்சியை தண்டனையாக வழங்கி நம்மை பழக்கப்படுத்தினர் என்பது ஆச்சர்யமூட்டும் தகவல்.

Tags:    

Similar News