கண் திருஷ்டி போக்க வரமிளகாய் உபயோகிப்பது ஏன்?அதை பயன்படுத்துவது எப்படி?

Update: 2022-12-28 00:45 GMT

நன்றாக சாப்பிட்டு கொண்டிருந்த குழந்தை ஒரு சிலரின் கண் பட்டவுடன் சரியாக உண்ணாது. வெளியுலகிற்கு காட்டாத குழந்தையின் முகத்தை சட்டென வலைதளங்களில் பதிவிட்டால் அதற்கு உடம்பு சரியில்லாமல் போய் விடும். நன்றாக இருக்கும் சிலர், உறவினர் சிலரின் கண் பட்டால் உடல் நிலை மோசவடைவார்கள், அல்லது பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும்.

இதெல்லாம் திருஷ்டி அல்லது கண் ஓம்பல் என்பார்கள். எந்த அடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்கிற சொலவடை கூட உண்டு. காரணம் கண் திருஷ்டி என்பது ஒருவரை உருக்குலைத்துவிடும். எப்போது ஒருவரின் ஆரா பலவீனமாக இருக்கிறது அப்போது எதிர்மறை ஆற்றலின் தாக்கம் நம்மை அதிகமாக பாதித்துவிடும். அதற்காக தான் கிடைக்கும் நேரம் எல்லாம் பூஜைகள், வழிபாடுகள், கோவில் தரிசனம் என நம் நேர்மறை அதிர்வை அதிகப்படுத்தி கொள்கிறோம். நம் ஆராவை பலப்படுத்தி கொள்கிறோம்.

இந்த திருஷ்டியை கழிக்க பல்வேறு முறைகளை நம் மரபில் கையாள்வது உண்டு. குறிப்பாக இதற்கென பிரத்யேகமாக பல்வேறு பொருட்களை பயன்படுத்துவது உண்டு. அதில் முக்கியமானது வரமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் எனப்படும் சிவந்த மிளகாய். பொதுவாகவே மிளகாய்க்கு ரஜோ குணம் அதிகம். சாத்வீக உணவு உண்பவர்கள் ரஜோ குணமுள்ள இந்த மிளகாயை தவிர்ப்பதன் காரணமும் இதுவே. ரஜோ குணம் அதிகமாக இருப்பதால் மிளகாய் விரைவாக திருஷ்டியை உள்ளிழுத்து கொள்ளும். அதனால் தான் திருஷ்டியை கழிக்க, தலை சுற்றி வலப்புறமாகவும் இடப்புறமாகவும் திருஷ்டியை கழிபார்கள்.

மிளகாய் மிக விரைவில் கெட்ட அதிர்வை உள்ளிழுத்து விடும் என்பதால் அதனை தீயிட்டு பொசுக்குவார்கள். அதிலும் குறிப்பாக கல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து ஒருவருக்கு திருஷ்டி கழிக்கும் போது அவர்கள் மீது விழுந்த தீய கண் ஒம்பல் முற்றிலும் முறிந்துவிடும் என்பது நம்பிக்கை.

கண் ஓம்பல் ஏற்படுத்திய பாதிப்பை பொருத்து எத்தனை மிளகாய் பயன்படுத்த வேண்டும் என்பதும் நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளது. உடல் மந்தம், உடல் சோர்வுக்கு 3 மிளகாய் வரை பயன்படுத்துவார்கள். கெட்ட கனவு, பதட்டம், போன்றவற்றிற்கு 5 மிளகாய் பயன்படுத்தலாம். யாராவது தீய சக்தியை ஏவியதாக உணர்ந்தால் 7 முதல் 9 மிளகாய் வரை பயன்படுத்தலாம்.

மேலும் அந்த திருஷ்டி கழித்த மிளகாயை எரிக்கும் போது அது வெளிப்படுத்தும் தன்மையிலேயே திருஷ்டி எந்த அளவுக்கு இருந்தது என்பதை உணர முடியும். பொதுவாக மிளகாயை எரிக்கும் போது அதன் காரல் காரணமாக நெடிய வாசம் அல்லது இரும்பல் போன்றவை ஏற்படும். திருஷ்டி அதிகமாக இருந்தால் அது போன்ற வாசம் அல்லது இரும்பல் போன்றவை ஏற்படாது எனவும் சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News