யாஸ் புயலால் பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ கோரிக்கை.
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது. இந்த பலத்த மழை காரணமாக அந்த மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அது மட்டுமின்றி ஆறுகள் அருகே உள்ள வயல்கள், வாழைத்தோப்புகள், தென்னந்தோப்புகள் ஆகியவை நீரிள் மூழ்கியுள்ளன. விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர் . தொடர் மழை மற்றும் சூறைக்காற்று வீசியதால் மக்களின் வீடுகளின் மேற்கூரைகள், சுவர்கள் ஆகியவை இடிந்து கீழே விழுந்தது. நாகர்கோயில் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.ஆர். காந்தி புயலால் பாதித்த பயிர்கள், தோப்புகள் மற்றும் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு தமிழ அரசு புயலால் பாதித்த விவசாயிகள் மற்றும் மக்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.