மத்திய அரசு சார்பில் கூடுதல் தடுப்பூசிகள் நாளை வருகை.!

Update: 2021-06-08 12:51 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தற்போது பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போடுதல் கவனம் செலுத்தி உள்ளனர். ஆனால் தமிழகத்தில் தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளதாகவும் பல்வேறு மக்கள் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளாமல் ஏமாற்றம் அடைந்து வீடுகளுக்கு திரும்புவதாகவும் பரவலாக காணப்படுகிறது. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு ஜூன் மாத இறுதிக்குள் 42.58 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாநில அரசின் கொள்முதல் திட்டத்தின் கீழும் தடுப்பூசிகள் பெறப்பட்டு வருகிறது. அந்தவகையில், மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் தற்போது வரை 88,53,690 டோஸ் தடுப்பூசிகளும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தமிழக அரசின் நேரடி தடுப்பூசி கொள்முதல் திட்டத்தின் கீழ் 13,10,270 டோஸ்கள் உள்பட மொத்தம் 1,01,63,960 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. 


இந்நிலையில் நாளை முதல் பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வர இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 14.74 லட்சம் தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 25.84 லட்சம் தடுப்பூசிகள் என மொத்தமாக தமிழகத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகள், ஜூலை இறுதிக்குள் பல்வேறு கட்டங்களாக வந்து சேரும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு குறையும் என்றும் முதற்கட்டமாக நாளை 63 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Similar News