நேர்த்திக்கடனாக 'வேல்' கொடுப்பதற்கு பதில் பணம் கொடுங்கள்: பக்தரிடம் பேசிய ஆடியோவால் சிக்கிய பெண் அதிகாரி!

Update: 2022-02-11 07:44 GMT

கடலூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் மூன்று அடி உயர் கொண்ட வெள்ளி வேல் ஒன்றை நேர்த்திக்கடனாக பக்தர் ஒருவர் அளித்துள்ளார். ஆனால் அதனை வாங்க மறுத்து ஒரு லட்சம் ரூபாய் பணமாக அல்லது வயரிங் பொருளாக கொடுத்தாலே போதுமானது என கோயில் செயல் அலுவலர் பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு கொளஞ்சியப்பர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். மாநிலத்தில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்தவர் வெங்கடபதி. இவர் கொளஞ்சியப்பர் கோயிலுக்கு வேல் சாத்துவதாக வேண்டியுள்ளார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி கோயிலுக்கு தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார். அப்போது கோயிலில் வேல் சாத்த வேண்டும் என செயல் அலுவலர் மாலா என்பவரிடம் வெங்கடபதி பேசியுள்ளார். அதற்கு வேல் வாங்கியதற்கு பில் இருக்கிறதா என மாலா கேள்வி எழுப்பியுள்ளார். வெங்கடபதி பில்லை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டு வந்துள்ளார். இதனால் தான் கடைக்காரரிடம் பில் வாங்கித்தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த மாலா ஒரிஜினல் பில்லை கொண்டு வாருங்கள் என வெங்கடபதியை திருப்பி அனுப்பியுள்ளார்.

அதன்படி ஜனவரி 31ம் தேதி மீண்டும் பில்லை எடுத்துக்கொண்டு வெங்கடபதி கோயிலுக்கு சென்றுள்ளார். அதற்கு முன்னரே மாலா வெங்கடபதியிடம் செல்போன் வாயிலாக பேசியுள்ளார். அதாவது நீங்கள் வேல் சாத்துவதற்கு பதிலாக பணமாக ரூ.1 லட்சம் கொடுங்கள், கோயிலுக்கு வயரிங் செய்ய வேண்டும் அதற்காக வயர் வாங்கிக்கொடுங்கள் என கூறியுள்ளார். மேலும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் வேல் உடைக்கப்படும். அதனால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லாமல் போய்விடும் என மாலா பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெங்கடபதி உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை தொடர்ந்து வெங்கடபதியின் வேல் கோயிலுக்கு சாத்தப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News