"ஆண்டவன் தீர்ப்பு ஒருநாள் கிடைக்கும் அதிலிருந்து வெளிவர முடியாது" - ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் மகன் வேதனை!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முப்பது ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 நபர்களில் ஒருவர் பேரறிவாளன். இவரை உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் 142'யைபயன்படுத்தி விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டது.
பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பை விடுத்த உச்ச நீதிமன்றத்தை ஆதரிப்பவர்கள் பலர் இருந்தாலும், அதற்கு ஈடாக பலரும் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வெடிகுண்டு வெடித்து மரணம் அடைந்த பொழுது, அவர் மட்டும் இறக்கவில்லை அவரைச் சுற்றியிருந்த போலீசார் கட்சிக்காரர்கள் என பலர் உடல் சிதறி இறந்தனர். அப்படி உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி சம்தானிபேகம் என்பவர் மகன் அப்பாஸ் பேரறிவாளனின் விடுதலை குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு போகவில்லை, ஒரு பாரதப் பிரதமரை கொன்றுவிட்டு மேலும் 16 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் கொன்றுவிட்டு, உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அதே உச்சநீதிமன்றத்தால் அவர் வெளி வந்துள்ளார்.
ஆண்டவன் தீர்ப்பு ஒருநாள் கிடைக்கும் அதிலிருந்து அவர்களால் வெளிவர முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியும் வேதனையும் இருக்கிறது.
அவர்கள் தமிழர்கள் என்பதால் வெளியே விட்டு விடலாமா? நம் நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள். அமைச்சரவை ஒன்று எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வீட்டில் இதேபோல் நடந்து இருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?
என மனக்குமுறலுடன், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் மகன் பேசியுள்ளார்.