ஓய்வு பெறும் வயதை உயர்த்தினால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகாதா? நிருபரின் கேள்விக்கு முதல்வரின் சாமர்த்திய பதில்!

Update: 2021-02-28 02:00 GMT

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 59-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகாதா? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.

இளைஞர்களுடைய வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகத் தான் 2019 ஆம் ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, ஏறத்தாழ 3 லட்சத்து 500 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, 304 தொழில்கள் தமிழகத்தில் வருவதற்கு அடித்தளமிட்ட அரசு அம்மாவின் அரசு. இதனால், நேரடியாக 5 இலட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் நபர்களுக்கு வேலை கிடைக்கும்.

கொரோனா வந்த சோதனையான காலத்தில், இந்தியாவிலேயே ரூபாய் 60,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு, 73 தொழில்கள் வருவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம், இதன் மூலம் ஏறத்தாழ ஒரு லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அண்மையில் ரூபாய் 28,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, ஏறத்தாழ 27 தொழில்கள் தமிழகத்திற்கு வருவதற்கு அடித்தளமிட்டோம்.

இப்படி புதிய புதிய தொழில்கள் தமிழகத்திற்கு வரும்போது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் மட்டும் முழுவதுமாக வேலைவாய்ப்பு கொடுத்துவிட முடியாது, குறிப்பிட்ட அளவுதான் நாம் வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும், பொருளாதாரம் மேம்பாடு அடையவும், தொழில் வளம் பெருகுவதற்கும் அம்மாவின் அரசு இப்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு இந்தியாவிலேயே தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்ற சிறப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார். 

Similar News