ரூ.31,500 கோடி திட்டங்கள் - தொடங்கி வைத்தார் மோடி!

Update: 2022-05-26 13:43 GMT

சென்னை வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். ரயில்வே, சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவில், பணி முடிந்த திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

75 கி.மீ. தொலைவுள்ள ரூ.500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை தேனி இடையேயான அகல ரயில் பாதை, சென்னை தாம்பரம் செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு ரூ.590 கோடி மதிப்பில் மூன்றாவது ரயில் பாதையை தொடக்கி வைத்தார்.

இதன்மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும், ரூ. 850 கோடி மற்றும் ரூ. 910 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கி.மீ. நீளமுள்ள எண்ணூர் செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கி.மீ. நீளமுள்ள திருவள்ளூர் பெங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார்.

இந்தத் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் திறந்து வைத்தார். 


Similar News