"உலகின் ஆன்மிக குருவாக இந்தியாவின் பணி அமையும்" என்று மதுரை ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தில், விவேகானந்தர் ஜெயந்தியன்று நடந்த நிகழ்ச்சியில், அம்மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் கூறினார்.
இந்திய நாட்டின் ஆன்மா ஆன்மிகம் தான். இதை எவராலும் மறுக்க இயலாது. ஆன்மீக வேரால் சிறப்புப்பெற்றுள்ள இந்த மண்ணில் காலம் காலமாக ஆன்மீக குருக்கள் தோன்றி உலக மக்களுக்கு உண்மைகளை எடுத்துக் கூறி வருகின்றனர்.
புத்தர், ரமணர் போன்ற எண்ணற்ற மகா ஞானிகளின் போதனைகள், உலக மக்களை விழிப்புணர்வை நோக்கி நகர வைத்து வருகிறது. இந்திய ஆன்மிக குருமார்களின் போதனைகள் பலரது வாழ்க்கையிலும் வெளிச்சம் பாய்ச்சி வருகிறது.
ஆன்மிகத்தில் உச்சம் பெற யோக மார்க்கம், பக்தி மார்க்கம் என அழகிய வழிகளை இந்திய ஆன்மிகம் உலக மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.
இப்படி உலக மக்களின் அமைதிக்கும், ஆனந்தத்திற்கும் காரணமாக அமையும் இந்திய ஆன்மிகத்தின் மேன்மையைப் பற்றியும், சுவாமி விவேகானந்தர் பற்றியும், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில், அம் மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், பேசியதாவது:
இந்தியாவின் சிறப்பையும், ஹிந்து மதத்தின் சிறப்பையும் உலக அரங்கில் உயர்த்திய முதல் மாமனிதர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் ஒரு பூரணிஞானி. அவர் மனித குலத்திற்கு ஞான, கர்ம, பக்தி, ராஜயோகம் போன்ற தன் கருத்துக்களால் ஆன்மிக சிந்தனைகளை வாரி வழங்கினார்.
வெளிநாடுகளின் ஆன்மிக தாகத்தை தீர்ப்பதாகவும், உலக நாடுகளுக்கு அறநெறி காட்டும் வழிகாட்டியாகவும், உலகின் ஆன்மிக குருவாகவும் இந்தியாவின் பணி அமையும் . வரும் நுாற்றாண்டில் உலக நாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கும் பணியை இந்திய ஆன்மிகம் செய்யும்'' இவ்வாறு பேசினார்.