தமிழக அதிகாரிகள் அலட்சியத்தால் தமிழகத்தில் நுழைந்த கேரளாவின் கழிவு லாரி - சிறைபிடித்த பொதுமக்கள்

Update: 2022-04-28 13:04 GMT

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு கொட்ட வந்த கழிவு மீன்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

கேரளாவில் உள்ள குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் கண்டெய்னர் லாரிகளில் தமிழகத்திற்கு ஏற்றி வந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இது போன்ற செயல்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை போலீசார் சரிவர கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடந்துள்ளது. கேரள பதிவெண் கொண்ட 2 கண்டெய்னர் லாரிகள் அதிக துர்நாற்றத்துடன் செல்வதை கவனித்த மக்கள் உடனடியாக அந்த இரண்டு லாரிகளையும் மடக்கி பிடித்தனர். ஓட்டுநரிடம் விசாரித்தனர். அப்போது லாரி உள்ளே மீன் கழிவு இருந்நது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள்சோபன் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன் பின்னர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிமேலாவது செக்போஸ்ட்களை உன்னிப்பாக கவனித்து கழிவுகளுடன் வரும் லாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamil

Tags:    

Similar News