ராஜீவ்காந்தி கொலையாளிகள் முன்கூட்டியே விடுதலை? 7 பேரின் ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரின் ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது பற்றி கடந்த அதிமுக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. இதன் மீது ஆளுநர் எந்த ஒரு முடிவு எடுக்காமல் இருந்த நிலையில் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க வேண்டியது ஆளுநர் மட்டும்தான் எனக் கூறினார். இதனை தொடர்ந்து முன்கூட்டியே விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பேரறிவாளன் மட்டுமின்றி ஆயுள் தண்டனை கைதிகளான 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றிய ஆவணங்கையும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai