மின்சாரம், கழிவறை வசதியின்றி அரசை எதிர்பார்த்து வாழ்ந்து வரும் 16 குடும்பங்கள் - திருச்சியில் பரிதாபம்

Update: 2022-06-16 13:22 GMT

திருச்சி மாவட்டம், உறையூர் பகுதி காவல்காரன் தெருவில் 16 குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறையாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: தினந்தோறும் தினக்கூலியாக எங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். நாங்கள் அம்மிக்கல், உரல் போன்ற பொருட்கள் சேதம் அடைந்திருந்தால் அதனை பராமரிப்பு செய்யும் பணிதான் எங்களின் குலத்தொழில் ஆகும். காலங்கள் மாற அது போன்ற பொருட்களை பயன்படுத்துவது மிக, மிக அரிதான விஷயமாகவே மாறியுள்ளது.

இருந்தபோதிலும் தெருத்தெருவாக நாங்கள் சோறு, தண்ணீர் இன்றி தூக்கத்தை தொலைத்து எங்களின் தொழிலை செய்து வருகிறோம் என கண்ணீருடன் கூறினர். எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி எங்களின் வாழ்க்கையை ஓட்டி வருகின்றோம்.

இந்நிலையில், எங்களின் வாழ்க்கையை முறையை நேரில் பார்த்தாவது எங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் திருச்சி மாவட்டத்தின் முதல் ஆட்சியரான பொறுப்பேற்ற மலையப்பன் அவர்களால்தான் எங்களுக்கு கடவுளாக நின்று தற்போது இருக்கின்ற இடத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கினார்.

பின்னர் வீடு கட்டுவதற்கு கூட பணம் இல்லாதததை உணர்ந்த பல தனியார் தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தனர். அதன் காரணமாக தற்போது மூன்று தலைமுறைகளாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றோம். தங்களுக்கு ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவைகள் அரசு வழங்கியிருக்கிறது.

ஆனால் நாங்கள் வசிக்கும் பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவுமே மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. கடந்த மூன்று தலைமுறைகளாக கோரிக்கை வைக்கப்பட்டு இதுவரையில் தங்களின் கோரிக்கைகளை எந்த ஒரு அரசும் ஏற்றுக்கொள்வில்லை. எங்களுக்கு அரசு சலுகைகள் அனைத்தும் கொடுங்கள் என கேட்கவில்லை, அதற்கு மாறாக குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கை ஆகும்.

மேலும் இது பற்றி பேசிய அவர்கள், மக்கள் தினக்கூலிகளாக வாழ்ந்தாலும் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக நாங்கள் தெருத்தெருவாக சுற்றித்திரிந்து கூலிவேலை செய்து எங்களின் குழந்தைகளை வளர்த்து வருகின்றோம்.

எங்களின் முன்னோர்கள் யாருமே படிப்பறிவு இன்றி குலத் தொழில் மட்டுமே செய்து வந்தனர். அதனையே நாங்களும் செய்து எங்களின் குழந்தைகளை படித்து இந்த சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம்.

ஆனால் எங்களின் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம் மற்றும் கழிவறைகள் எதுவும் இல்லாமல் உள்ளனர். அதிலும் பெண் குழந்தைகள் கழிவறைக்கு செல்வதற்கு மிகப்பெரிய இன்னலுக்கு பின்னரே செல்ல வேண்டும். எங்களை ஏன் என்று கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை. தற்போது இங்கு ஒரு அனாதைகள் போன்று வசித்து வருகின்றோம். எனவே அரசு எங்க 16 குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றனர்.

Source, Image Courtesy: Abp



Tags:    

Similar News