பள்ளியில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் என்ன தண்டனை? விபரீத முடிவை கையில் எடுக்கும் தமிழக அரசு - எச்சரிக்கும் கல்வியாளர்!

Update: 2022-05-10 03:01 GMT

பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கினமாக நடந்து கொள்வதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுக்குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ளும் மாணவர்களின் சான்றிதழில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும். வகுப்பறையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நிரந்தரமாக பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். 

Full View

பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு தவறானது என்று கல்வியாளர் தேவநேயன் அரசு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது ஃபேஸ்புக் பதிவில், இது தவறான அறிவிப்பு. மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்வது தான் சரி. அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல. இதனால் குழந்தைகள் இடைவிலகல் ஆவார்கள். இப்படி விலகலான குழந்தைகள்தான் பல்வேறு வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் விளிம்பு நிலை குழந்தைகளே. பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது? அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம், மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது என்பது எப்படி சரியாகும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறை செய்தால் அரசாணை எண் 121 , 2012 படி அவர்கள் பணிநீக்கம் செய்யப் பட வேண்டும். மேலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தயவு செய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். நெறிப்படுத்துவோம். எனவே குழந்தைகளின் சிறந்த நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Similar News