குருவா? சிஷ்யனா? இந்தத் தேர்தலில் வெல்லப் போவது யார்?

Update: 2021-04-09 07:19 GMT

இந்த தேர்தலில் வீதியில் இறங்கி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதையோ, தெரு முக்கில் கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்வதையோ அவ்வளவாக பார்த்திருக்க மாட்டோம். முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் தான் 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்தது என்று கூறினால் அது மிகையாகாது. பல பேர் தங்களது வேட்பாளர் யார் என்று தெரியாமல் வாக்களித்த கதைகள் அதிகம் உள்ளன.

இத்தனை காலம் தேர்தல் வேலைக்கு அடிமட்ட தொண்டர்களை நம்பியிருந்த அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை எப்படி எதிர்கொண்டன? எல்கேஜி திரைப்படத்தில் வருவதுபோல் கன்சல்டன்ஸி நிறுவனங்கள் மூலம் தான். இதில் திமுக ஐ-பேக் நிறுவனத்திடமும் அதிமுக மைண்ட் ஷேர் அனாலிடிக்ஸ் என்ற நிறுவனத்திடமும் தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை ஒப்படைத்திருந்தன.

வேடிக்கை என்னவென்றால் ஐ-பேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோரும், மைண்ட் ஷேர் அனாலிடிக்ஸ் நிறுவனத்தின் சுனிலும் பழைய நண்பர்கள் என்பது தான். அது போக 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணி செய்த போது சுனில் அவருக்கு கீழ் வேலை பார்த்துள்ளார்.

பின்னர் சுனில் அங்கிருந்து விலகி புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருந்த போது, 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் சுனிலை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுத்து கொடுத்த சுனில் பின்னர் மனஸ்தாபம் காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அதிமுகவுக்கு தேர்தல் வேலை பார்க்க சுனிலை அழைத்து வந்துள்ளார். இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சசிகலா அதிமுகவில் இணைவது தான் கட்சிக்கு நல்லது என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் கருதிய நிலையில் சுனில் அதற்கு எதிராக செயல்பட்டதாக கட்சியினர் கிசுகிசுக்கிறார்கள்.

அதோடு கட்சியில் ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். வேட்பாளர் தேர்வில் அதிருப்தி ஏற்பட்டதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலருக்கு சீட்டு வழங்கப்படாத நிலையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பது நானா அல்லது சுனிலா என்று ஓபிஎஸ் கடுப்பானதாகவும் கூறப்படுகிறது. சுனில் திமுகவுக்காக வேலை பார்த்தவர் என்பதால் அவநம்பிக்கையில் அதிமுகவினர் அவர் எடுத்த முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஐ-பேக்கில் தன்னுடன் வேலை பார்த்தவர்களை சுனில் தனது நிறுவனத்தில் வைத்திருப்பதாகவும், சென்னையில் திமுகவுக்கு வேலை பார்த்த ஐ-பேக் டீமில் சுனிலுக்கு தெரிந்தவர்கள் இருப்பதாகவும், அதிமுக வெளியிட இருந்த முக்கிய அறிக்கைகள், அறிவிப்புகள், வாக்குறுதிகள் இவற்றைப்பற்றி திமுகவுக்கு தகவல் கிடைக்க இது காரணமாக இருக்கக் கூடும் என்று அதிமுகவினரிடையே சந்தேகம் நிலவுகிறது.

இது போதாதென்று திமுக ஆட்சியில் செல்வாக்குடன் வலம் வந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரிகள் ஜாபர்சேட் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரை சுனில் ஆலோசகர்களாக வைத்திருந்ததும் இந்த சந்தேகத்தை பலப்படுத்தி இருக்கிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல இந்த தேர்தல் கன்சல்டன்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் பிரஷாந்த் கிஷோர் மற்றும் சுனிலின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் விதமாக அமையும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.

With inputs from Tamil Hindu

Tags:    

Similar News