கோவிலில் பணியாற்றும் அதிகாரிகள் பணக்காரர்கள் ஆனது எப்படி? -கேள்வி எழுப்பிய கட்சித் தலைவர்!
தமிழகத்தில் கோவில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாறியுள்ளதாகவும் அறநிலையத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் எவ்வாறு பணக்காரர்கள் ஆகிறார்கள் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கோவில் அடிமை நிறுத்து என்ற சமூக வலைத்தள பிரச்சாரம் அனைத்து தர மக்களாலும் வரவேற்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களின் தற்போதைய நிலையை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலை திருட்டு, உண்டியல் திருட்டு, நிலம் அபகரிப்பு என்று பல்வேறு புகார்கள் தினம் தினம் எழுந்த வண்ணமே உள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் அனைத்து விதமான பிடிகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கோவில்களில் கிடைக்கும் வருவாய்க்கு தகுந்த தரவுகள் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் இந்து அறநிலையத் துறையில் பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி குறுகிய காலத்தில் பணக்காரர்கள் ஆனார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
கோவில்கள் ஊழல் சாம்ராஜ்யமாக உள்ளது என்றும் கோவில்கள் பற்றி எழுப்பப்பட்ட புகாரில் இந்து அறநிலையத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று ஒரு மாதத்திற்குள் இந்து அறநிலையத்துறை பதில் அளிக்கவில்லை என்றால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவில்களின் நிதியில் அதிகாரிகளுக்கு கார்கள் வாங்குவது அவற்றுக்கு எரிபொருள் நிரப்புவது அலுவல் கூட்டங்களுக்கு உணவு சிற்றுண்டி வாங்குவது என்று அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோக சிலை கடத்துவது கோவில் சொத்துக்களை அபகரிப்பது போன்ற சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் அதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.