ஆக்கிரமிக்கப்படும் கோவில் மலை -அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Update: 2021-04-20 02:00 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமிக்க முயன்று வருவதை உடனடியாக அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் அருகே வில்வாரணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. பங்குனி மாத திருவிழா, ஆடி மாதத்தில் நடைபெறும் காவடி விழா, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகமாக இந்த கோவிலுக்கு வருகை தந்து முருகப் பெருமானை வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த கோவிலில் தினமும் மூன்று கால பூஜைகளும் தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

விசேச நாட்களில் இந்த கோவிலை சுற்றியுள்ள மலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த மலைக் குன்றை சுற்றி உள்ள பகுதியில் உள்ள பாறைகளை உடைத்து இடத்தை சமப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவது, மாட்டுக் கொட்டகை அமைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் ஆக்கிரமிப்பாளர்கள் போதாது என்று வெளியூரில் இருந்தும் சிலர் வந்து கோவில் இருக்கும் மலையை உடைத்து அதில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கிரிவலம் செல்வதற்கு இடையூறாக உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News