கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி - வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்குமா?

Update: 2021-04-22 08:45 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சோழர் காலத்தின் வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக தொல்லியல் துறையினர் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்ட பணியை ஜனவரி மாதம் தமிழகத் தொல்லியல் துறை தொடங்கியது.

அப்போது ட்ரோன்கள் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை புகைப்படம் எடுத்து மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் மாளிகைமேடு என்னும் இடத்தில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த அகழ்வாராய்ச்சியின் மூலம் மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்கள் கிடைக்கும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் 4 அதிகாரிகள் கொண்ட குழு மற்றும் 35 தொழிலாளர்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொள்வார்கள் என்று தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்று தமிழக தொல்லியல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்ற முதலாம் ராஜேந்திர சோழன் இங்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில் என்ற சிவன் கோவிலை கட்டினார். இந்த கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோவில்களும் அழியாத சோழர் காலத்து பெரும் கோவில்கள் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு அகழ்வராய்ச்சி செய்வதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வந்த சோழன் காலத்து மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், தெய்வங்கள் மற்றும் ஆட்சி முறை போன்றவை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News