அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை உடனடியாக மூட வேண்டும்-உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Update: 2021-05-01 08:18 GMT

மானாமதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை உடனடியாக மூட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.




சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதியின்றி கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டப்பட்ட இந்த தேவாலயம் வழிபாட்டிற்காக திறந்தும் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான மாரிமுத்து என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் மானாமதுரை தயாபுரம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அருகே மாவட்ட நிர்வாகத்தின் முறையாக அனுமதி பெறாமல் நடைபெற்று வந்த தேவாலயம் கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவாலய கட்டுமான பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் இந்த வழக்கில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரான ஊராட்சி மன்ற தலைவர் யாஸ்மின் ஏற்கனவே ஊராட்சி அமைப்பு அதிகாரத்தில் இல்லாத போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை வைத்து கட்டுமான பணிக்கான காலக்கெடுவை நீட்டித்து ஊராட்சி நிர்வாகம் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு கிறிஸ்தவ தேவாலயம் கட்டுமான பணிக்காக அனுமதி அளிக்கும் அதிகாரம் ஊராட்சி நிர்வாகத்திடம் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தான் உள்ளது என்றும் இதனால் கட்டப்பட்டு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ள தேவாலயத்தை நிர்வாகத்தினர் உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். அவ்வாறு தேவாலயத்தை மூடவில்லை என்றால் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் தேவாலயத்தை மூட வேண்டும் என்று கூறினர்.

Similar News