சிதிலமடைந்து கிடக்கும் சிவன் கோவில்-நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை!

Update: 2021-05-06 01:15 GMT

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அருகே பழமை வாய்ந்த சிவன் கோவிலில் ஒன்று சிதிலமடைந்து அழியும் நிலையில் இருந்து வருவதால் அதனை உடனடியாக புனரமைத்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி அருகே பழைய நெடுவயல் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. 100ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவிலில் உள்ள சன்னதிகள் அனைத்தும் உருக்குலைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த சன்னதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நவகிரக சன்னதி இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமாக கோவில் அருகே கண்மாய் ஒன்று உள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் அந்த பகுதி மக்களுக்கு நீர் நிலையாக இருந்த இந்த தெப்பக்குளம் தற்போது பராமரிப்பு இல்லாமல் குப்பை கொட்டும் கண்மாயாக மாறியுள்ளது. இந்த கண்மாயில் கோவில் கட்டுமான கற்களும் கோவில் சிலைகளும் புதைந்து கிடப்பதாக அப்பகுதி பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோவிலுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் இந்த கோவிலை அறநிலையத்துறை அதிகாரிகள் எட்டிக் கூடப் பார்க்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே இந்த கோவிலை அதிகாரிகள் உடனடியாக புனரமைத்து பொதுமக்கள் சிரமமின்றி வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து தரவேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் வரலாறு இந்த கோவிலுக்குள் புதைந்து உள்ளதாகவும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதமாக இந்த கோவிலை பராமரிக்க வேண்டியது அறநிலையத்துறையின் கடமையாக உள்ள நிலையில் அதிகாரிகளின் மெத்தன போக்கால் கோவில் இடிந்து விழும் நிலையில் இருப்பது வேதனை தரும் விஷயமாக இருந்து வருகிறது.

Similar News