ஐ.நாவில் முறுக்கு விநியோகித்து சாமர்த்தியமாக சாதித்த இந்தியா!

Update: 2021-03-06 02:00 GMT


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் 2023ஆம் ஆண்டை எதற்கான ஆண்டாக அறிவிப்பது என்ற போட்டியில் சாமர்த்தியமாக வெற்றி பெற்றுள்ளது இந்தியா. ஐ.நா சபை ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு நோக்கத்துக்கான ஆண்டாக அறிவித்து அதை நிறைவேற்ற ஆண்டு முழுவதும் பல முயற்சிகளில் ஈடுபடுகிறது. அதன்படி இந்த ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான பொருளாதாரத்துக்கான ஆண்டாக கடந்த 2019ஆம் ஆண்டு‌ அறிவிக்கப்பட்டது.

அதே போன்று 2023ஆம் ஆண்டுக்கான 'தீம்' முடிவு செய்வதற்காக ஐ.நா பொதுக் கூட்டம் கூடியது. இதில் 2023ஆம் ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த வெற்றியை பெற இந்திய தூதர்கள் பயன்படுத்திய முறை பிற நாடுகளின் தூதர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதிலுமே மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தாலும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஊட்டச்சத்து மிகுந்த உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத சிறுதானியங்களை உணவு பழக்க வழக்கத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி இந்தியா 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த முயற்சியில் வெற்றி பெற பிறநாடுகளில் ஆதரவும் தேவை. இந்த ஆதரவைப் பெற இந்திய தூதர்கள் எடுத்த முயற்சிதான் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பெரும்பாலான நாடுகளில் அரிசியும் கோதுமையுமே முக்கியமான உணவுப் பொருளாக இருக்கின்றன. இவற்றில் மாவு சத்து அதிகம் என்பதாலும் புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவு என்பதாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையோடு சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கும் காரணமாகிறது.

இதை சுட்டிக்காட்டி சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த இந்திய தூதர்கள், சிறுதானியங்களின் மகிமையை எடுத்துரைக்க சிறு தானியங்களால் செய்யப்பட்ட 'முறுக்கை' ஐநா சபையில் கூடியிருந்த 193 நாடுகளின் தூதர்களுக்கும் விநியோகித்து நமது பண்பாட்டின் பெருமையை உலகறியச் செய்து இருக்கின்றனர்.

சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்பது மட்டுமல்லாது மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்ப பயிரிடுதலிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க கோரிய இந்தியாவின் முயற்சியால் சிறுதானிய பயிரிடுதல், பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவை பற்றி சர்வதேச அளவில் விரிவான ஆய்வு நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முயற்சியை முன்னின்று எடுத்த ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி இந்தியாவுக்கு ஆதரவளித்த வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் "இது நான் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்க வலியுறுத்துகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால் நமது முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய கம்பு கேழ்வரகு சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதோடு மக்கள் ஆரோக்கியமான உணவு உண்டு உடல் நலத்துடன் வாழவும் வழிவகுக்கும் என்பதால் பலரும் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர்.

Tags:    

Similar News