கொடுமுடி அருகே கோவில் திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் அப்பகுதி பக்தர்கள் கோவில் முன்பு திரண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்காக அப்பகுதி பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக திருவிழாவிற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்த ஊர் மக்கள் இதற்காக ஊஞ்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமா செல்வியிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதாலும் வழக்கமாக நடைபெறும் திருவிழாவிற்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக விளங்கும் தீ மிதிக்கும் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் வேண்டுமென்றால் கோவில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்து கொள்ளலாம் என்றும் தேவையில்லாமல் கோவில்களில் கூட்டங்கள் கூட கூடாது என்று பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த ஊர் பொதுமக்கள் இரவு 11.20 மணி போல் கோவிலில் ஒன்று கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் ஊர் பொதுமக்களிடம் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் பேரூராட்சி செயல் அலுவலர் உமா செல்வியிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த அவர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ., சைபுதீனிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஊர் மக்கள் ஈரோடு சென்றுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி கோவில் திருவிழாக்கள் தடை செய்யப்பட மாட்டாது என்று நேற்று விழுப்புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஈரோட்டில் திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.