மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு: கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனாவால் அதிரடி முடிவு!
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மார்ச் 15 முதல் நாக்பூரில் ஊரடங்கை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கு மார்ச் 21 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் போலீஸ் கமிஷனரேட்டின் கீழ் வரும் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரின் பிரதேச ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைத் தவிர அனைத்து நிறுவனங்களும் ஊரடங்கு காலத்தில் முழுமையாக மூடப்படும்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் திறந்த நிலையில் இருக்கும் என்றும், கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் மாநில அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்தார். நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 1710 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தொற்று காரணமாக எட்டு பேர் உயிர் இழந்தனர். மொத்தம் 10,458 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கிடையே மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 13,659 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது இந்த ஆண்டின் அதிகபட்ச ஒரு நாள் அதிகரிப்பு ஆகும்.