கோவிலை இடிக்க மாநகராட்சி முடிவு! சாலை மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்!

Update: 2021-03-12 07:50 GMT

தண்டையார்பேட்டையில் கோவிலை இடிக்க அந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பக்தர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

















சென்னை தண்டையார்பேட்டையில் சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் தினமும் அந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். முதலில் சிறிதாக கட்டப்பட்ட இந்த கோவில் பிறகு அப்பகுதி மக்களின் பங்களிப்பின் காரணமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த கோவிலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டனர். இந்நிலையில் இந்த கோவில் தெருவை அடைத்து கட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த கோவிலால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் சங்க நிர்வாகி ஒருவர் மாநகராட்சியிடம் புகார் அளித்தார். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். இதனைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை மாநகராட்சியை சேர்ந்த 20திற்கும் மேற்பட்டோர் நேற்று கோவிலை இடிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க முயன்றதை அடுத்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு எண்ணுர் நெடுஞ்சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு கோவில் இடிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கோவிலை இடிக்க வந்த அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தண்டையார்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News