அதிக சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில் இப்ப இவர் தான் டாப்!

Update: 2021-03-13 12:15 GMT

அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் டெஸ்லாவின் எலோன் மஸ்க் ஆகியோரிடையே கடந்த ஆண்டு உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டத்தை வென்றெடுப்பதற்காக ஒரு போட்டி இருந்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர்களில் யாரும் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியைப் போல் தங்கள் செல்வத்தில் பில்லியன்கணக்கான உயர்வைப் பெறவில்லை. அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானியின் நிகர மதிப்பு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, 2021'ஆம் ஆண்டில் இதுவரை 16.2 பில்லியன் டாலர் உயர்ந்து 50 பில்லியன் டாலராக உள்ளது.


தனது சொத்து மதிப்பில் மிகப்பெரிய உயர்வை கௌதம் அதானி கொண்டிருந்தாலும், ஜெஃப் பெசோஸ், எலோன் மஸ்க் ஆகியோரை விட நிகர சொத்து மதிப்பில் பின்தங்கியே உள்ளார். இதே காலகட்டத்தில் எலான் மஸ்க் இதுவரை தனது நிகர மதிப்பில் 10.3 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ள நிலையில், ஜெஃப் பெசோஸ் 7.59 பில்லியன் வீழ்ச்சியைக் கண்டுள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அதானி குழுமத்தில் ஒரு நிறுவனத்தைத் தவிர அனைத்து அதானி குழும பங்குகளும் அதன் மதிப்புகளில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் கண்டன.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் உலகில் மிகக் குறுகிய காலத்தில் அதிக சொத்து சேர்த்து, இப்போது உலகின் 26 வது பணக்காரராக உயர்ந்துள்ளார். விமான நிலையங்கள் வணிகம் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் அதானி குழுமம் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. மேலும் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பங்கு விலை இந்த காலகட்டத்தில் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. அதானிக்கு அடுத்த இடத்தில் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் 14.3 பில்லியன் டாலர் வளர்ச்சியுடன், அதிக சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 84.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 10 வது பணக்காரர் ஆகா உள்ள நிலையில், 2021'இல் இதுவரை, 8.05 பில்லியன் டாலர் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.

Similar News