சிந்து நதிநீர் ஆணையம் கூட்டம்: இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் அதிகாரிகள்!

Update: 2021-03-23 11:44 GMT

நிரந்தர சிந்து நதி நீர் ஆணையத்தின் கூட்டத்திற்காக இன்று பாகிஸ்தான் அதிகாரிகளின் தூதுக்குழு வாகா எல்லை வழியாக இந்தியா வந்து சேர்ந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதிநீர் ஆணையத்தின் முதல் கூட்டம் இதுவாகும். பாகிஸ்தானின் சிந்து நீர் ஆணையர் மெஹ்ர் அலி ஷா தலைமையிலான தூதுக்குழு, சிந்து நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையிலான இந்திய அணியுடன் மார்ச் 23-24 தேதிகளில் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.


 நிரந்தர சிந்து கமிஷனின் கடைசி கூட்டம் 2018 ஆகஸ்டில் லாகூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் 2003 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் முழுமையாக அமல்படுத்த ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை பாகிஸ்தான் எழுப்பியது. இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக நடந்த திரை மறைவு பேச்சுவார்த்தைகளுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.


பாகல் துல் மற்றும் லோயர் கல்னாய் நீர்மின்சார நிலையங்களை வடிவமைப்பதில் பாகிஸ்தானின் ஆட்சேபனைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து, தங்கள் இந்திய பிரதிநிதிகளுடன் விவாதிக்க சிந்து நீர்நிலைகள் குறித்த பாகிஸ்தான் ஆணையத்தின் 8 பேர் கொண்ட குழு இன்று டெல்லி வந்தடைந்துள்ளது. கூட்டம் இன்று மற்றும் நாளை என இரு தினங்களுக்கு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. கடைசி சந்திப்பு ஆகஸ்ட் 2018 இல் லாகூரில் நடந்தது. இரண்டு சந்திப்புகளுக்கும் இடையிலான இடைவெளி கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2018 கூட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் நதிகளில் இந்தியா நிர்மாணித்து வரும் நீர் மின் திட்டங்களின் இடங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் தூதுக்குழு இந்தியாவிடம் கோரியது.

ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்கான இந்தியாவின் முடிவின் தாக்கம் மற்றும் கொரோனா தொற்றுநோய் நிரந்தர சிந்து கமிஷனின் கூட்டங்களை திட்டமிடுவதில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் கூட்டம் நடத்தப்படுகிறது. உலக வங்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1960 இல் கொண்டுவரப்பட்ட சிந்து நீர் ஒப்பந்தம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக நீடித்த ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இது பல தசாப்தங்களாக இருதரப்பு உறவுகளில் பல போர்கள் மற்றும் இடையூறுகளில் இருந்தும் தப்பித்து வருகிறது. ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, நிரந்தர சிந்து கமிஷன் ஆண்டுக்கு ஒரு முறையாவது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News