'கோவில் அடிமை நிறுத்து' சார்பாக தஞ்சை பெரிய கோவிலில் தேவாரம் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம்!

Update: 2021-03-27 08:06 GMT

இந்து கோவில்களை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் நேற்று தஞ்சை பெரிய கோவிலில் ஈஷா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பக்தர்கள் தேவார பாடல் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.


இந்தியாவில் கோவில்களைத் தவிர மற்ற அனைத்து வழிபாட்டு தலங்களும் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களே பராமரித்து வருகின்றனர். இந்து கோவில்களை மட்டும் இந்து அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் கோவில்கள் பராமரிக்கப்படாமல் அழிந்துவரும் அவல நிலையில் உள்ளது. மேலும் சிலை கடத்தல், உண்டியல் திருட்டு, கோவில் நிலம் ஆக்கிரமிப்பு என பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக ஈஷா அறக்கட்டளையை சேர்ந்த சத்குரு சமூக வலைதளங்களில் 'கோவில் அடிமை நிறுத்து' என்று பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதற்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம், நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 இடங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்களை பாடி பொதுமக்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற பக்தி பாடல்கள் பாடுவதன் மூலமாக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களுடன் தஞ்சை மக்கள் இணைந்து பெரிய கோவிலில் நேற்று ஒரு மணி நேரம் தேவாரப் பாடல்களைப் பாடினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள் 'கோவில் அடிமையை நிறுத்து' என்ற பதாகையை ஏந்தி கொண்டிருந்தனர். இந்த பிரச்சாரத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து ஆதரவு பெருகி உள்ளதால் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மதத்தை சார்ந்த மக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

Similar News