கோவில் குளத்தை சீரமைத்த சிவனடியார்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்!

Update: 2021-04-11 06:50 GMT

நாமக்கல்லில் சிவன் கோவிலுக்கு சொந்தமான கோவில் குளத்தை தூர்வாரிய போது அங்கு தண்ணீர் ஊற்று இருப்பதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீர் கிடைப்பதே கடினமாகி வரும் காலத்தில், அதுவும் தூர்ந்து போன குளத்தில் தண்ணீர் ஊற்றெடுத்ததால் இதை நல்ல சகுனமாகக் கருதி சிவனடியார்களும் பக்தர்களும் பரவசம் அடைந்தனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக குளம் ஒன்றும் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவில் குளம் தண்ணீர் நிறைந்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. இந்நிலையில் மழை சரியாக பெய்யாததாலும் கோவில் குளம் சரிவர பராமரிக்கப்படாததாலும் குளம் நீரின்றி வறண்டு போய் காணப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த கோவில் குளத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து இந்த கோவில் குளத்தை புனரமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து கோவில் குளத்தை புனரமைக்கும் பணியை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மேற்கொண்டனர்.

அப்போது கோவில் குளத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்திய போது கோவில் குளத்தினுள் நீரூற்று இருந்தது தெரியவந்தது. அந்த நீர் ஊற்றில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியே வந்ததை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பழங்காலத்தில் நீர் நிலைகளை கண்டுபிடித்து அங்கு கோவில்களை இந்து அரசர்கள் கட்டினர். ஆனால் தற்போது இந்து அறநிலையத்துறையிடம் கோவில் சிக்கிக்கொண்டு பராமரிக்கப்படாமல் அனைத்து கோவில்களில் உள்ள குளங்கள் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறன. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏற்படத்தான் செய்கிறது.

எனவே மழைக்காலங்களில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கு சொந்தமான கோவில் குளங்களையும் தூர்வாரி சுத்தம் செய்து வைத்தால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News