இந்தியாவில் 10 லட்சம் பேரில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து - அபாரமான விகிதத்தை எட்டிய பெருமையை பெற்றது!

Update: 2021-03-10 03:19 GMT

2021 மார்ச் 3 வரை, இந்தியா முழுவதும் 1,58,43,204 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 10 லட்சம் பேரில் 11,675 பேருக்கு கொரோன தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 3 வரை, தமிழ்நாடு முழுவதும் 5,34,658 தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 10 லட்சம் பேரில் 7,011 பேருக்கு கொரோன தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

உலகத்திலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட இரண்டாவது பெரிய நாடு இந்தியாவாகும். இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது 10 லட்சம் மக்கள் தொகையில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் விகிதம் பாராட்டுக்குரியது. தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து வழங்கும் பணியை இந்தியா தொடங்கியது.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் தன்மை உடையவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் போடப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் 3 கட்ட பரிசோதனை அறிக்கைகளை தாக்கல் செய்தது. இவற்றை மத்திய மருத்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, நிபுணர்களுடன் ஆராய்ந்து, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் மிக்கது என்பதை கண்டறிந்தது.

இதையடுத்து அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக, கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதே போல் புனேவில் உள்ள இந்திய சீரம் மையமும், இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் பரிசோதனை அறிக்கைகள், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றை தாக்கல் செய்தது.

இதை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவும், மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் தயாரிப்பு ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்பிட்டு ஆராய்ந்தது. மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, கோவிஷீல்டு தடுப்பூசியை இந்திய சீரம் மையம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Similar News