ராஜாக்கமங்கலம் அருகே ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாக்கமங்கலம் அருகே காக்காதோப்பு என்னும் இடத்தில் சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.இதனால் நேற்று இரவு வழக்கம் போல் புனரமைப்பு பணிகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவில் கதவு உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்தில் இருந்த 3 பவுன் நகை மற்றும் பூஜைப் பொருள்கள் திருடு போய் இருந்ததை கண்டனர். இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக ராஜாக்கமங்கலம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலை சுற்றி உள்ள வீடுகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த 2000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே திருடர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கோவிலில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்