100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவில் இடிப்பு- பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்!

Update: 2021-03-30 05:24 GMT

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் தற்போது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் இந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதால் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. புனரமைப்பு பணியின் காரணமாக கோவிலில் இருந்த சிலைகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் நிறுத்தப்பட்டிருந்தது.

புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கோவிலுக்குள் புகுந்த 15 பேர் கொண்ட மர்ம நபர்கள் கோவிலை அடித்து நொறுக்கினர். மேலும் கோவிலுக்கு செல்லும் மாடிப்படியையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளையின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளதால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.பாகிஸ்தானில் தொடர்ந்து இந்து கோவில்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று பழமையான கோவில் இடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து கோவில்கள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோவில் இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News