40 ஆண்டுகாலம் பராமரிக்கப்படாமல் இருந்த குளம் - நடவடிக்கை எடுத்த ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம்!

Update: 2021-03-28 01:30 GMT

சுமார் 40 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான கோவில் குளம் புனரமைக்கப்பட்டு அதில் புதிதாக நீர் சேமிக்கப்பட்டு இருப்பது அப்பகுதியில் உள்ள மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மற்ற கோவில்களில் உள்ள குளத்தையும் கோவில் நிர்வாகம் புனரமைக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்.





திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக திருவானைக்கா டிரங்க் சாலையில் கோவில் குளம் ஒன்று உள்ளது. கோவிலுக்கு சொந்தமான இந்த குளம் பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்பட்டது. இது குறித்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த இணை ஆணையர் கோவில் குளத்தினை புனரமைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி தேர் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று இந்த குளத்தில் தீர்த்தவாரி

நடைடெற்றது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த கோவில் குளத்தினை உடனடியாக புனரமைத்து அதில் புதிதாக நீர் தேங்குவதற்கும் வழி அமைத்துத் தந்த கோவில் நிர்வாகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமான பல்வேறு கோவில் குளங்கள் நீர் தேங்குவதற்கு வழி இல்லாமல் இதே போல் வறண்டு கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் குளங்களை கோவில் நிர்வாகமே சுத்தப்படுத்தி அதில் நீரை சேமித்து வைத்தால் கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாது என்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News