சீன-பாகிஸ்தான் கூட்டறிக்கையில் காஷ்மீர் பற்றிய விவகாரம் , இந்தியா கடும் கண்டனம்!
சீன-பாகிஸ்தான் நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம், இனி காஷ்மீர் பகுதி இந்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் செயல்படும். அது மட்டுமின்றி காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்காக மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சீனாவின் உள்ள செங்குடு நகரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் "ஜம்மு - காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை, சீனாவிடம் பாகிஸ்தான் தெரிவித்தது" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில் "ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பல முறை உறுதியாக தெரிவித்து விட்டோம். ஜம்மு - காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு தலையிடுவதையோ, அது பற்றி பேசுவதையோ, இந்தியா அனுமதிக்காது. சீனா - பாகிஸ்தான் கூட்டறிக்கையில் ஜம்மு - காஷ்மீர் பற்றி குறிப்பிட்டது தேவையற்றது.
மேலும், சீன - பாகிஸ்தான் பொருளாதார பாதை அமைக்கப்படும் பகுதி, இந்தியாவுக்கு சொந்தமானது, ஆனால் பாகிஸ்தான் சட்ட விரோதமாக அதை ஆக்கிரமித்துள்ளது என்பதையும் சீனாவிடம் இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது." என்று அவர் கூறினார்.