ஆப்கானிஸ்தான்: கடந்த முறை எப்படி இருந்தது ஷரியாவின் கீழ் தலிபான் ஆட்சி ?
1996 முதல் 2002 வரை தலிபான்கள் சரியாக மிகத்தீவிரமான ஷரியாவின் விளக்கங்களை செயல்படுத்தினார்கள்.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, ஆக்கிரமித்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அந்நாட்டை மறுபடியும் கட்டமைக்க அமெரிக்கா செய்த முயற்சிகள் அனைத்தும் தலிபான்கள் எழுச்சி பெறுவதை தடுக்க முடியவில்லை. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாக கைப்பற்றி வெளிநாட்டு சக்திகளிடமிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக தம்பட்டம் அடித்தாலும், அந்நாட்டு எல்லைகளுக்குள் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தங்களின் சுதந்திரம் குறித்த ஆழமான கவலைகள் வேரூன்றி உள்ளது.
இரண்டாவது முறை ஆட்சி அமைக்கப் போகும் தலிபான்கள் தாங்கள் மிகவும் மிதமான நிர்வாக அணுகுமுறையை பின்பற்றலாம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்தாலும், ஷரியா சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்பதில் உறுதியாக இருப்பதால் மக்களின் பயம் நியாயமானதாகவே தோன்றுகிறது.
ஷரியா சட்டம் என்றால் என்ன?
இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றுபவர்களின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்தும் கட்டளைகளின் தொகுப்பாக ஷரியா உள்ளது. இது குர்ஆனில் இஸ்லாத்தின் பல்வேறு கோட்பாடுகள், முகமது நபியின் வாழ்க்கையின் பதிவுகள் பொதிந்துள்ள போதனைகளையும் உள்ளடக்கியது. ஷரியாவுக்கென்று தெளிவான வரையறுக்கப்பட்ட சட்டங்கள் இல்லை.
குர்ஆன் மதகுருமார்கள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் ஆகியோரின் பல்வேறு விளக்கங்களுக்கு இது மாறுபடுகிறது. பல்வேறு விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஷரியாவின் படி குற்றங்கள் என்று பார்த்தோமேயானால் அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குறைந்த தீவிரமான 'தாஜிர்' என்பது நீதிபதி தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு தண்டனைகளை வழங்கலாம். இரண்டாவது குற்றங்கள் 'குசேஸ்'. இதில் பாதிக்கப்பட்டவருக்கு என்ன கிடைத்ததோ அதே துன்பத்திற்கு குற்றவாளி உட்படுத்தப்படுவார். 'ஹூடுட்' குற்றங்கள் கடவுளுக்கு எதிரான குற்றங்கள். மது அருந்துவது, திருடுவது, கொள்ளையடிப்பது, தவறான கள்ள உறவு வைத்திருப்பது ஆகியவை இதில் விழும். இவை கல்லெறிதல், அங்கங்களை வெட்டுதல், நாடு கடத்துதல், தூக்கு போன்ற தண்டனைகளைக் கொடுக்கும்.