இராமேஸ்வரம் கோவிலில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு- அறநிலையத்துறை அலட்சியத்தால் பக்தர்கள் சிரமம்.!
ராமேஸ்வரம் கோவிலில் புனித நீராட செல்லும் பக்தர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகளால் நடந்து செல்ல இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் புனித க்ஷேத்திரத்திற்கு செல்வதன் முக்கியமான நோக்கம் அங்குள்ள 23 தீர்த்தங்களில் நீராடுவது. ஆனால் இதில் தொடர்ந்து பல பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தங்களை பராமரிப்பு பிரச்சினைகளால் வேறு இடங்களில் மாற்றி அமைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை கடந்த காலத்தில் முயற்சி செய்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுபோன்று அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளால் அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வருகின்றன.
தற்போது பக்தர்கள் நீராட செல்லும் வழியை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பதால் பக்தர்களுக்கு சிரமமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் கிழக்கு மற்றும் தெற்கு ரத வீதிகளில் இருந்த கடைகளை கோவில் நிர்வாகம் அகற்றியது.
இந்த வீதிகளில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வசதியாக மேற்கூரையும் பின்னர் அமைக்கப்பட்டது. பின்னர் 2019ஆம் ஆண்டு கோவிலின் வடக்கு கோபுர நுழைவு வாசல் வழியாக நீராடச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த வழி நீராடச் செல்வதற்கு பக்தர்களுக்கு எளிதாக இருந்த நிலையில் தற்போது வடக்கு ரத வீதி நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் பந்தல் அமைத்து நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் நீராட செல்லும் வழி தடை பட்டிருப்பதால் நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிலும் அமாவாசை போன்ற முக்கிய விழா நாட்களில் பக்தர்கள் அதிகம் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்க கடைகளை மூட அறிவுறுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் வசதிக்காக இந்த பாதையில் நெடுஞ்சாலைத்துறையினர் டைல்ஸ் பதித்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிப்பு குறித்து கோவில் நிர்வாகத்திடம் புறப்பட்டபோது கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோயில் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. அறநிலையத் துறையும் நெடுஞ்சாலை துறையும் ஒருவருக்கொருவர் மாற்றி கை காட்டாமல் பொறுப்பாக ஆக்கிரமிப்பை அகற்றி பக்தர்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.