அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய சில தினங்களில் தலிபான்கள் விரைவாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். காபூல் வரை முன்னேறி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றி ஆப்கானிஸ்தானுக்கு, இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று மறு பெயரும் சூட்டினர்.
அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து, அமைதிக்காகவும் ரத்தம் சிந்துவதை தவிர்ப்பதற்காகவும் நாட்டை விட்டு வெளியேறுவதாக ஒரு முகநூல் பதிவில் தெரிவித்து விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதிக்கும் அங்கு வசிக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் பாதுகாப்பான வழி ஏற்படுத்தி விட்டு ஆப்கானிஸ்தானிலிருந்து முழுவதுமாக வெளியேற அமெரிக்கா முடிவு எடுத்தது. அதன் முடிவுதான் ஆப்கானிஸ்தானின் தற்போதைய குழப்பங்கள்.
ஆப்கானிஸ்தானில் அதிகார பரிமாற்றம் குறித்து தலிபான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசு ஆகிய மூன்று பக்கங்களின் பிரதிநிதிகள் கத்தாரில் உள்ள தோகாவில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது இவை அத்தனையும் நிகழ்ந்து முடிந்தது. காபூலை தலிபான்கள் சுற்றிவளைத்த பிறகு அஸ்ரப் கானி ஞாயிற்றுக்கிழமை அன்று தஜிகிஸ்தான் சென்று அங்கிருந்து ஓமன் தப்பி சென்றார்.
கனியின் கீழ் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை, காபூலில் நுழைய மாட்டோம் என்று தலிபான்கள் அமெரிக்காவிடம் வாக்கு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த தலிபான்கள் 1990களில் இருந்து வேறுபட்டதா?
ஆப்கான் அரசுக்கு விசுவாசமாக இருந்தவர்களை பழி வாங்க மாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக அனைத்து செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. வீடுவீடாகச் சென்று அமெரிக்க ராணுவத்திற்கும், ஆப்கானிஸ்தான் அரசிற்கும் ஆதரவு அளித்தவர்களை தலிபான் கொல்வதாக பல செய்திகள் வருகின்றன.
இதனால் தான் ஆப்கானிஸ்தானிலிருந்து தஜிகிஸ்தான், ஈரான் துருக்கியை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இதில் அமைச்சர்களும் அடக்கம். இதில் சிலர் இந்தியாவை தேடியும் அடைக்கலம் தேடி வருகின்றனர்.