இரண்டு வாரங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த மலைக் கிராமங்களில் வசிப்பவர்கள் செல்போன் டவர் அமைத்துத் தராததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தேரி மலைப் பகுதியில் உள்ள வள்ளி மதுரை, வாழைத்தோட்டம், தாதரவலசை, தோல் தூக்கி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டது.
தாங்கள் வாழும் பகுதிகளில் செல்போன் டவர் நெட்வொர்க் வசதி சரிவர கிடைப்பதில்லை என்றும் இதனால் அவசர தேவைக்கு மொபைல் போனில் அழைக்கவும் குழந்தைகள் கல்வி கற்கவும் மிகவும் சிரமமாக இருப்பதாக இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவிகள் நெட்வொர்க் வசதி சரியாக கிடைக்காததால் தாதரவலசை என்ற பகுதிக்குச் சென்று ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அதிகாரிகள் செல்போன் டவர் அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தால் மட்டுமே வாக்களிப்போம் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல தொலைதூர கிராமங்களிலும் மலைப்பகுதிகளிலும் நிலைமை இவ்வாறிருக்க, மதமாற்றம் அதிகம் நிகழும் கடலோர கிராமங்களில் எல்லா விதமான புதிய திட்டங்களுக்கும் பணிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஆனக்குழி பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரீத்தாபுரம் ஆலய பங்குத்தந்தை அம்புரோஸ், ஆனக்குழி சி.எஸ்.ஐ. போதகர் அமோஸ் ஆகிய பாதிரியார்கள் மக்களை போராட்டம் நடத்தத் தூண்டியதாகத் தெரிகிறது.
செல்போன் டவர் அமைத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களுக்கு தங்களது கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தவும் எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முழு உரிமையும் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு புதிய திட்டம், பணி வந்தாலும் பாதிரியார்கள் முன்னின்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதன் பின்னணி என்ன என்று பொது மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.