நில ஆக்கிரமிப்பு வழக்கு - அறநிலையத்துறை மற்றும் அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

Update: 2021-05-19 11:41 GMT

பல கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள‌ நிலையில், சமூக ஆர்வலர்கள் இது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண முயன்று வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள குரு நமச்சிவாய மூர்த்தி மடத்தின் சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அவர்களை அகற்றி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

குரு நமச்சிவாய மூர்த்தி மடத்தின் ஆயிரக்கணக்கான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது குறித்து 2018ஆம் ஆண்டு முதல் அரசுத் துறைகளுக்கு தொடர்ந்து பல மனுக்கள் அனுப்பியதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மடத்துக்கு சொந்தமான நிலங்களை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 5 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் அவற்றில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுக்களை பரிசீலித்து வருவதாகவும் கூறினார். ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அறநிலையத் துறையின் விழுப்புரம் இணை ஆணையரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு, இந்து சமய அறநிலைய துறை மற்றும் குரு நமச்சிவாய மூர்த்தி மடத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் அரசு வழக்கறிஞர் கூறியபடி ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களைப் பெற்று அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Source: https://www.google.com/amp/s/www.hindutamil.in/amp/news/tamilnadu/672605-occupancy-of-land-owned-by-chidambaram-monastery-what-is-the-action-taken-high-court-notice-to-the-collector.html 

Tags:    

Similar News