கேரள புகைப்பட கலைஞரின் வித்தியாசமான கருத்து புகைப்படத்திற்கு சர்வதேச விருது.!

Update: 2021-06-05 13:08 GMT

கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். இவரின் வித்தியாசமான கருத்தைக் கொண்ட இந்த புகைப்படத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. அப்படி என்ன கருத்தை வைத்துள்ளார் என்று இதோ பாருங்கள், "உலகம் தலைகீழாக போகிறது" என்ற தலைப்பில் எடுத்தப் புகைப்படம் சர்வதேச விருதைப் பெற்றுள்ளது. கேரள புகைப்பட கலைஞர் தாமஸ் விஜயன். இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தில் ஓராங்குட்டான் ஒன்று மரத்தை அணைத்தப்படி தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது. அதற்கு மேலே, மரத்தின் இலைகள், வானம் தெரிகின்றன.


"உலகம் தலைகீழாகப் போகிறது" என்று பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படத்துக்கு நேச்சர் TTL என்ற சர்வதேச அமைப்பு 2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை வழங்கியுள்ளது. 'இந்தப் புகைப்படத்தை ஒருவர் எளிதில் கடந்து செல்ல முடியாது' என்று நேச்சர் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் குழப்பத்துக்கு ஆட்படுத்தும். ஒராங்குட்டான் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றச் செய்யும். ஆனால், ஒராங்குட்டான் தலைக்கீழாக தொங்கவில்லை. மரத்தின் இலைகளும், வானமும் நீரில் பிரதிபலிக்கின்றன. 


கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் தற்போது கனடா நாட்டில் வசித்து வருகிறார். வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். போர்னியா தீவுக்குச் சென்றபோது, அவருக்கு இப்படி ஒரு காட்சியை புகைப்படமாக எடுக்க தோன்றியிருக்கிறது. 8000க்கு மேற்பட்ட படங்கள் இடம்பெற்ற அந்தப் போட்டியில், தாமஸ் விஜயனின் இந்தப் புகைப்படம் விருது பெற்றுள்ளது. 1,500 பவுண்ட் விருதுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News