நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு கோவில் நிதியிலிருந்து உணவு : அமைச்சர் சேகர் பாபு..!

Update: 2021-06-06 08:01 GMT

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் ஜூன் 14-ஆம் தேதி வரை உணவு பொட்டலங்கள் கோவில்கள் மூலம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று குறையாததால் பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு வாரம் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு திருக்கோவில்கள் சார்பாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு காலம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவில்களில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்கள் நோயாளிகள், உறவினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தேவையான நிதியை இந்து அறநிலையத்துறையில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து உணவு பொட்டலங்கள் கோவில்களின் அன்னதான நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதால் அனைத்து கோவில்களிலும் அன்னதான நிதி சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் கருத்துகளாக இருந்து வருகிறது. மேலும் அன்னதான உணவுப் பொட்டலங்களில் அரசியல்வாதிகளின் படங்கள் இடம்பெறாமல் தெய்வங்களின் புகைப்படங்களே இடம் பெற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News