தேரையர் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அரிய வகை மூலிகை.!

Update: 2021-06-12 01:15 GMT

கிராமங்களில் இயற்கை வேலிகளிலும், கரடுகளிலும், காடுகளிலும் தான் இந்த பிரண்டை கிடைக்கும். ஆனால் இப்போதோ இதன் மகிமை உணர்ந்து மொத்தமாக பயிர் செய்யப்பட்டு நகரங்களில் உள்ள சந்தைகளிலும் கூட கிடைக்கிறது. ஏனென்றால் இதன் மருத்துவ குணம் தான். அதே சமயம் வைரம் போன்று எலும்புகளுக்கு வலு சேர்ப்பதாலும் இதற்கு 'வஜ்ஜிரவல்லி' என்ற பெயர் உண்டு. பிரண்டையில் முப்பிரண்டை, ஓலைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, உருட் பிரண்டை என பல வகைகள் உள்ளது.  


பசியின்மை பிரச்சினையால் அவதிபடுபவர்கள் பிரண்டைத் துவையலைச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் நீங்கும். உணவுகளின் சுவை தெரியவில்லை என்றாலும் பிரண்டைத் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.  அதே போல தொடர்ச்சியாக மூட்டுவலி பிரச்சினை இருப்பவர்களுக்கும் இந்த பிரண்டை தூதுவளை துவையல் நல்ல பலனைக் கொடுக்கும்.  


ஏர் உழுவும் காலங்களில் எல்லாம் கால் வலியை போக்க விவசாயிகள் பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து துவையல் நல்லெண்ணெய் விட்டு சாப்பிடுவது வழக்கம். அதையே நாமும் தொடர்ந்து செய்து வர மூட்டுவலி பிரச்சினை நீங்கிவிடும். பிரண்டைத் தண்டுகளை சின்ன சின்னதாக நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து, வடகமாகக் குளிர் காலத்தில் சாப்பிட்டு வர, கப நோய்கள் எதுவும் அவ்வளவு எளிதில் நம்மை நெருங்கிவிட முடியாது என்று 'தேரையர் காப்பியம்' நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News