அன்னதான பொருட்களில் கை வைக்கிறார் - கோவில் செயல் அலுவலர் மீது குவியும் புகார்கள்.!
தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி காமாட்சி அம்மன் கோவிலின் செயல் அலுவலர் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை செயல் அலுவலர் பணியிலிருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை செயல் அலுவலராக நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் கடந்த 5 ஆண்டுகளாக சந்திரசேகர் என்பவர் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களுக்கு பார்சல் மூலம் அன்னதான திட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த கோவிலில் எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம், தக்காளி சாதம் மற்றும் சாம்பார் சாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை அனைத்தும் பெயரளவுக்கே தயார் செய்யப்படுவதாகவும், சாப்பாட்டை வாயில் வைக்க முடியவில்லை என்றும் அன்னதானத்தை சாப்பிடும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த சாதத்தை ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே கீழே போட்டுவிட்டு செல்வதாகவும், அப்படிக் கீழே போடப்படும் சாதத்தை காகம் கூட சாப்பிடவில்லை என்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். கோவில் அன்னதானத்திற்காக வழங்கப்படும் நிதியை கோயில் செயல் அலுவலர் பெயரளவில் அன்னதானம் போடுகிறோம் என்று வெளியே காட்டிக் கொண்டு அன்னதானத்திற்கான பொருள்களை எடுத்து ஊழல் செய்கிறார் என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அதே போல் இந்த கோவிலுக்கு செயல் அலுவலர் மாதத்துக்கு 7 நாட்கள் மட்டுமே வருவதாகவும் கோவில் பராமரிப்பு பணிகளும் சரிவர நடைபெறவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.