கோவையில் கோவில் சொத்துக்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் - நியாயமாக நடந்து கொள்ளுமா அறநிலையத்துறை?
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்றும், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் வாடகைக்கு இருப்பவர்களிடம் இருந்து முறையாக வாடகை வருகின்றதா என்று கண்காணிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பு ஒன்றை பிறப்பித்தது. அதனடிப்படையில் கோவிலுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை கோவை மண்டல அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் துவங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட பட்டியல் மற்றும் பட்டியல் சாராத கோவிலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்கள் குறித்த விவரங்கள் மற்றும் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் சொத்துக்களின் விவரங்களை கணக்கு எடுக்குமாறு கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்வேலன் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் அறநிலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். அறநிலையத்துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து கோவில் நிலங்கள் மீட்டு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து அறநிலையத் துறை அதிகாரிகளும் தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட கோவில்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களின் பட்டியலை தயார் செய்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு கோவில் நிலங்களை விரைவில் மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.