ஹிந்து தர்மசாலாவை இடிக்கக் கூடாது : பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

Update: 2021-06-16 01:15 GMT

பாகிஸ்தானில் உள்ள இந்து தர்மசாலாவை இடிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்ததுடன் இந்து தர்மசாலாவை புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்துக்கள், சீக்கியர்கள் அங்கே விட்டுவிட்டு வந்த சொத்துக்களை வெளியேறிய அறக்கட்டளை சொத்து வாரியம் என்ற வாரியம் தனது கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருகிறது. கராச்சி சத்தார் பகுதியில் இந்து தர்மசாலா ஒன்று உள்ளது. அதனை இந்த வெளியேறிய அறக்கட்டளை சொத்து வாரியம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தற்போது அந்த தர்மசாலா கட்டிடத்தை இடித்துவிட்டு அங்கு வணிக வளாகம் கட்ட இருப்பதாக புகைப்பட ஆதாரத்துடன் சிறுபான்மையினர் நல வாரியத்தின் உறுப்பினர் ரமேஷ் குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இந்து தர்மசாலாவை இடித்துவிட்டு அங்கு வணிக வளாகம் கட்டுவதற்கான அனுமதியை சிந்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாக வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 1932ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்து தர்மசாலாவை இடிப்பதற்கு தடை விதித்தனர். மேலும் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நல வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட 70 லட்சம் ரூபாயை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இதேபோல் சிறுபான்மையினர் ஆணையத்தின் வரவு செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக பாகிஸ்தான் மத விவகார அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். இந்து தர்மசாலா இடிக்கப்படும் என்று சிந்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த தர்மசாலாவை இடிக்கக் கூடாது என்று கூறியதுடன் புராதன சின்னமாக பாதுகாக்கப்படும் என்று அறிவித்திருந்தது அப்பகுதி இந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News