மலேசியா: இதுவரை இல்லாத அளவிற்கு கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா பாதிப்பு!

Update: 2021-07-27 12:56 GMT

நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா வைரஸ்களின் பாதிப்புகள் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தில் மிகவும் கடுமையான முறையில் பாதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலேசியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ்களின் பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் செல்கிறது என்று சொல்லலாம். தினசரி கொரோனா பாதிப்பு மலோசியாவில் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.


மலேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் பாதிப்புகளின் எண்ணிக்கை 15,902 ஆக இருந்தது. மலேசியாவில் தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 13-ம் தேதி முதல் தொடா்ந்து 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது.


நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,13,438 ஆக உயர்வடைந்துள்ளது. 92 பேர் உயிரிழந்துள்ளதால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,994 ஆக உயர்வடைந்துள்ளது. மக்களின் தகுந்த நடவடிக்கைகள் மூலமாக இந்த பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும் மலேசிய அரசாங்கம் சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Similar News