கீவ் நகரை நோக்கி ரஷ்யாவின் பெரும்படை - இந்திய தூதரகத்தின் அவசர அறிவிப்பு!
இந்தியர்கள் அனைவரும் உடனடியாக உக்ரைன் தலைநகர் கீவ்'வில் இருந்து வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் அவசரமாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியர்களை மீட்க 'ஆப்ரேஷன் கங்கா' என்ற பெயரில் நடந்து வரும் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது இதனால் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ௬-வது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, "இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தலைநகர் கீவ்வில் இருந்து கிடைக்கக்கூடிய ரயில் அல்லது இதர வாகனங்கள் மூலமாக அவசரமாக வெளியேறி விடுங்கள்" என அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.